இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற உள்ளது.
பிரதான வேட்பாளர்கள் தமது பிரச்சார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன், நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அனுரகுமார திஸாநாயக்க இத்தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகிவரும் பின்புலத்தில் அவர் வெற்றிபெற்றால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையில்லாது எவ்வாறு ஓர் அரசாங்கத்தை கொண்டுசெல்ல முடியும் என பல்வேறு கேள்விகள் சமூக மட்டத்தில் எழுந்துள்ளன.
இந்த நிலையில், அனுரவின் அரசாங்கத்தின் கீழ் 25 அமைச்சுகள் உருவாக்கப்பட உள்ளதாகவும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் வரை அமைச்சுகள் செயலாளர்கள் ஊடாக நிர்வகிக்கப்படும் என்றும் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி அண்மையில் கூறியிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் சிரேஷ்டி சட்டத்தரணிகளிடம் ஒருவன் செய்தி பிரிவு வினவியது. இதற்கு அவர்கள் கூறிய பதில் வருமாறு,
அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் அரசியலமைப்பின் பிரகாரம் காபந்து அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட முன்னர் அரசியலமைப்பின் 47ஆவது சரத்தின் 2ஆம் பிரிவின் பிரகாரம் உடனடியாக பிரதமரை நீக்க வேண்டும்.
பிரதமர் நீக்கப்பட்டால் அவர் தலைமையிலான அமைச்சரவையும் கலையும். பிரதமரை நீக்காது நாடாளுமன்றத்தை கலைத்தால் 48ஆவது சரத்தின் 1ஆம் பிரிவின் பிரகாரம் நாடாளுமன்றம் கலைக்கப்படும் சந்தர்ப்பத்தில் இருக்கும் அமைச்சரவையே காபந்து அரசாங்கமாக மாறும்.
அனுரகுமார திஸாநாயக்க முதலில் பிரதமரை நீக்கி 43ஆவது சரத்தின் 4ஆம் பிரிவின் பிரகாரம் புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க வேண்டும். அதன் பின்னர் காபந்து அரசாங்கமொன்றை உருவாக்க முடியும்.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் மூன்று பேரை கொண்டு அவர் காபந்து அரசாங்கத்தை அமைக்க முடியும்.
அனுரகுமார ஜனாதிபதியானால் அவரது நாடாளுமன்ற பதவி வெற்றிடமாகும் என்பதுடன், கொழும்பு மாவட்ட பட்டியலில் அவருக்கு அடுத்ததாக இருக்கும் நிபுணாராச்சி எம்.பியாக தெரிவாகுவார்.
44ஆவது சரத்தின் 1 மற்றும் 2ஆம் பிரிவுகளின் பிரகாரம் ஹரிணி அமரசூரிய, விஜித ஹேரத் மற்றும் நிபுணாராச்சி ஆகியோரை கொண்ட காபந்து அரசாங்கத்தை அனுரகுமாரவால் அமைக்க முடியும்.
அமைச்சுகள் சிலவற்றை ஜனாதிபதியாக அனுரவும் வைத்துக்கொள்ள முடியும் என்பது சிக்கல்கள் ஏற்படாது.
47ஆவது சரத்தின் 1ஆம் பிரிவின் பிரகாரம் அமைச்சரவையில் அதிகபட்சமாக 30 பேர் இருக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ள போதிலும் குறைந்தபட்சமாக எவ்வளவு பேர் இருக்க வேண்டுமென கூறவில்லை. எனவே, அமைச்சரவையை அமைப்பது தொடர்பில் அனுரவுக்கு சிக்கல்கள் இருக்காது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையென எதிர்க்கட்சிகளால் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர முடியும் என்றாலும், நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்படும் என்பதால் அதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை என சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.
இதேவேளை, அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவானால் அவரது அரசாங்கத்தின் பிரதமராக விஜித ஹேரத் அல்லது ஹரிணி அமரசூரிய ஆகிய இருவரில் ஒருவரே நியமிக்கப்படுவர் என அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.