நாங்கள் எந்தக் கட்சியின் உறுப்பினர்களோ, ஆதரவாளர்களோ அல்ல. இந்த ஜனாதிபதித் தேர்தல் பல்வேறு வழிகளில் முக்கியத்துமானது என்பது நமக்குத் தெரிந்ததே.
இத்தேர்தலின் மக்கள் ஆணையின் வழியே, இதுவரையான இலங்கையின் அரசியல், சமூக, பொருளாதாரத் தளங்களில், புதியதொரு மாற்றம் நிகழ்வது முக்கியமானது. இந்த மாற்றம் அல்லது மாற்றீடானது வெறும் தனி நபர் அளவிலான மாற்றமாக இருப்பதில் எந்த நன்மையையும் இலங்கை மக்களுக்கு கொண்டு வந்து சேர்க்கப் போவதில்லை.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான, கருத்து நிலைகளிலும் , கொள்கைகளிலும் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்தே ஆக வேண்டும். மாற்றம் நிகழ வேண்டும் என்பது மக்களின் விருப்பார்வம் என்பதையும் தாண்டி, இந்த விடயத்தில் புதியதொரு மாற்றம் நிகழ்ந்தே ஆக வேண்டுமென்பது ஒரு முன் நிபந்தனையாகும்.
இந்த முக்கியத்துவமான, அடிப்படை மாற்றம் நிகழும் பட்சத்தில்தான், அந்த மாற்றத்தில் இருந்துதான் , ”புதியதொரு இலங்கையை ”கட்டியெழுப்ப முடியும். இந்த வாய்ப்பினை தவற விடக்கூடாது என நம்புபவர்கள் நாம்.அந்த வகையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாம் வெறும் பார்வையாளர்களாக இருப்பதை விடுத்து , நம்மால் இயலக் கூடிய சில பணிகளைச் செய்ய முயல்கிறோம்.
யாரை ஆதரிப்பது?
புதிய மாற்றம் எனும் அடிப்படையில், ரணிலையோ, சஜித்தையோ ஆதரிப்பது என்பது எண்ணிப் பார்க்கவே முடியாதது. இந்தக் கட்சிகளும் இவர்களும்தான் இதுவரையான அனைத்து சீரழிவுகளுக்கும், உள்நாட்டு யுத்தத்திற்கும், அழிவுகளுக்கும், பின்னடைவுகளுக்கும் பொறுப்பான அதிகாரத்தில் இருந்தவர்கள்.
இத் தேர்தலில் National People’s Power ஒரளவு இந்த விடயத்தில் பொறுத்தமானவர்களாக உள்ளனர். இக்கூட்டமைப்புக்கு தலைமைதாங்குகின்ற , ஜேவிபியின் கடந்த கால இனவாதச் சிந்தனைகள் விமர்சனத்திற்குரியவையே. அவை பற்றிய ஆழமான உரையாடல்கள் எதிர்காலத்தில், National People’s Power தலைமையுடன் செய்யப்படல் வேண்டும்.
சிவில் சமூக அமைப்பு
இலங்கையின் அரசியல் , இனத்துவ வரலாற்றில் பௌத்த தேசியவாத இனவாத கருத்து நிலையும், அதன் அரச அதிகாரத்தாலும் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டும் ஒடுக்கப்படும் மக்களாக உள்ள , தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் நியாயமான உரிமைகளும் அடையாளங்களும் பாதுகாக்கப்படுவதுடன், அரசியலமைப்பு ரீதியாகவும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும் என்பதில் நாம் உறுதியான நிலைப்பாடு கொண்டவர்கள்.
இதன் இன்னொரு பரிமாணமாக , இனங்களுக்கிடையிலான உறவும், பரஸ்பர நம்பிக்கையையும் கட்டியெழுப்ப அனைத்து இனக் குழுமங்களுக்குள் இருந்தும் , சமத்துவ நிலைக்கான பணிகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்பதிலும் தெளிவுள்ளவர்கள்.
நாம் ஒரு சிவில் சமூக அமைப்பாகவே செயற்படுவதால் , இத்தேர்தலில் மட்டுமே National People’s Power இன் வெற்றிக்காக வேலை செய்வோம். அந்தந்த கால , வர்த்தமானத்திற்கு ஏற்ப , மக்களின் அபிலாசைகளை அறிந்தும், மக்களினதும், நாட்டினதும் முன்னேற்றத்தினை கருத்திற் கொண்டும் முடிவுகளை எடுத்துக் கொள்வோம்!
இதில் இணைந்து பங்காற்றும் அனைவரும் கூடிக் கலந்து பேசிக் கொள்வோம் !
நன்றி