கட்சியிலிருந்து தான் நீக்கப்படவில்லையெனவும் , தனக்கு எதுவித உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் விடுக்கப்படவில்லையெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
பாலித ரங்கே பண்டார ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ அருண, மவ்பிம, மற்றும் லங்காதீப போன்று பல பத்திரிகைகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போது வரை நான் ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக எனக்கு எதுவித உத்தியோகப்பூர்வ அறிவிப்புகளும் விடுக்கப்படவில்லை.
அதேபோன்று கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக எனக்கு இதுவரை அறிவிக்கவில்லை.
தற்போதும் செயலாளர் நாயகம் பதவியில் கடமையாற்றி வருகிறேன். ஆனால் நான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு பணத்துக்காக விலை போயுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. அவ்வாறு கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் நான் நிச்சயம் அறிவிப்பேன்” என அவர் மேலும் கூறினார்.