ஜனாதிபதித் தேர்தல் களம் ஒருபுறம் சூடுபிடித்துள்ள நிலையில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் கொழும்பு வருகை பல்வேறு சந்தேகங்களையும், இலங்கை தொடர்பான விவாகாரங்களில் இந்தியா புதிய வியூகங்களை வகுக்கவுள்ளதா என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளன.
இந்தியா, மொரீஷியஸ், மாலத்தீவு, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளை உறுப்பு நாடுகளாகக் கொண்ட கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக அஜித் தோவல் இலங்கைக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருந்தார்.
இலங்கைத் தீவில் அடுத்து ஆட்சியமைக்கவுள்ள அரசாங்கத்தின் கீழ் தேசிய பாதுகாப்பு தொடர்பான இந்திய- இலங்கை இருதரப்பு ஒத்துழைப்பை சமரசம் செய்யாமல் இருப்பதை உறுதி செய்யும் ஒரு வெளிப்படையான நடவடிக்கையாக அஜித் தோவல் முக்கிய நான்கு ஜனாதிபதி வேட்பாளர்களை சந்தித்திருந்தார்.
பிரதான வேட்பாளர்களுடன் சந்திப்பு
இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முதன்முறையாக அதிக வரவேற்பை பெற்றுள்ள ஜே.வி.பி எனும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச ஆகியோரை சந்தித்து அவர் கலந்துரையாடியிருந்தார்.
இலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களுடனான தோவலின் ஈடுபாடு, இலங்கை இந்திய உறவை மேலும் மேம்படுத்தும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
மேலும், இலங்கையின் பாரிய சொத்து வளமே கடற்பரப்பு தான். அதன் பயனை அடைய பல்வேறு நாடுகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதில் இந்தியா மற்றும் சீனாவின் ஆதிக்கமே அதிகம்.
இந்தியப் பெருங்கடலில் இந்தியா தனது சொந்த மூலோபாயக் கவலைகளை எடுத்துரைப்பதன் மூலம் கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு ஆகியவற்றை கொழும்பு பாதுகாப்பு மாநாடு கையாள்கிறது.
இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையில், குறிப்பாக பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த இந்தியா முனைவது போல் தெரிகிறது.
புதுடில்லியின் கவனம்
சீனாவின் செல்வாக்கு எல்லைக்குள் இலங்கை இழுக்கப்படக்கூடாது என்பதில் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகின்றமையை காணமுடிகின்றது.
இலங்கைக் கடற்பரப்பில் சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல்கள் செயற்படுவது தேசியப் பாதுகாப்புக் கவலையைத் தூண்டும் என்ற காரணியை முதன்மையாகக் கொண்டு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
இந்நிலையில் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்திய இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதற்கு ஒரு வருட கால தடை விதித்தது. இதனால் சீனா இலங்கை மீது அதிருப்தி வெளியிட்டிருந்தது.
அண்மையில், ஒரு அரிய சம்பவமாக, இந்திய மற்றும் சீன போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டன. சீனாவின் 03 போர் கப்பல்கள் கடந்த 26 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
இருநாட்டு கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு செயற்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதேவேளை, இந்திய கடற்படைக்கு சொந்தமான INS மும்பை போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருந்தது.
சொன்னது என்ன?
இலங்கை விமானப் படையினரால் இயக்கப்படும் டோனியர் கடல் ரோந்து விமானத்திற்கு தேவையான அத்தியாவசிய உதிரிப்பாகங்கள் INS மும்பை போர்க்கப்பலில் கொண்டு வரப்படுவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்திருந்தது.
எவ்வாறாயினும் இந்த விடயத்தில் இலங்கை சட்டப்பூர்வமாக செயற்பட்டதால் இந்தியா ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்து சமுத்திரத்தில் இலங்கையின் மூலோபாய நிலை மற்றும் இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவின் போட்டியிடும் நலன்கள் பற்றிய கவலைகளை வெளிப்படுத்திய வெளிவிகார அமைச்சர் அலிசப்ரி இலங்கை இராணுவத் தளங்களுக்கான போர்க்களம் அல்ல என்று உறுதியாகக் கூறினார்.
“அனைத்து நாடுகளுக்குமான பொதுப் பாதைக்குரிய சுதந்திரத்தை ஊக்குவிக்கும் வகையில், அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கப்பல்களை இலங்கை வரவேற்கிறது“ என்றார்.