21ம் திகதி நாம் , தேசிய மக்கள் சக்திக்கும் தோழர் அனுராவுக்கும் அளிக்கும் வாக்குகள் எந்த விதத்திலும் , வீணற்றுப் போகப் போவதில்லை!முதலாவது செய்வோம்! அல்லது இரண்டாவதாக செய்ய வைப்போம்!
————————————————- நிதால்
இந்த ஜனாதிபதித் தேர்தலில் யாரும் 50 சத வீத வாக்குகளை பெறுவது கடினம் என்பதாகவே பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி பற்றிய நம்பிக்கைகள் தகர்ந்துள்ளன. யாருமே 50 சத வீதத்தினை பெற முடியாத போது , முதல் மற்றும் இரண்டாம் பெரும்பான்மை வாக்குப் பெற்றவர்களில் இருவரே அடுத்த தேர்வுக்கு உரியவர்களாகின்றனர்.
அப்படிப் பார்க்கின்ற போது , அனுர குமாரவும் , சஜீத் பிரேமதாசாவுமே அடுத்த ஜனாதிபதிக்கான தேர்வில் உள்ளார்கள்! இருவரின் வாக்கு வங்கியை பார்க்கின்ற போது, பெரும்பான்மை சிங்கள மக்களினதும் , தமிழ், முஸ்லிம், மலையக மக்களினதும் வாக்குகள் தீர்மானகரமான பாத்திரத்தை இரு தளங்களில் வகிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்த இரு போட்டியாளர்களுக்கும் இம்மக்களது வாக்குகள் முக்கியத்துவமிக்கதாக உள்ளதால் , தேர்தல் திட்டமிடலும் பிரச்சாரங்களும் அக்கறைகளும் நாட்டின் அனைத்து தளங்களிலும் முன்னெடுக்கப்பட்டன.
இம்முறை அனுர குமாரவுக்கான பெரிய வாய்ப்பு ,நாட்டின் சிங்கள பெரும்பான்மை மாவட்டங்களில் அதிகூடிய வாக்கினைப் பெறும் நிலை காணப்படுவதுடன், எந்தந் தேர்தலிலும் இல்லாதவாறான தமிழ், முஸ்லிம், மலையக மக்களினதும் வாக்குகளை அவர் ஒரளவு பெறக்கூடிய நிலையாகும்.
சஜீத் பிரேமதாசாவுக்கான வாய்ப்பு , நாட்டின் சிங்கள பெரும்பான்மை மாவட்டங்களில் , பழைய ஐக்கிய தேசியக்கட்சியின் வாக்குகளில் பெரும்பாலான வாக்குகளை பெறக் கூடியதாக இருப்பதும், கிழக்கு, மலையகம் , வடக்கில் கணிசமான வாக்குகளை பெறக் கூடியதாக இருப்பதுமாகும்.
இன்னொரு வகையில் சொன்னால் , வடக்கு , கிழக்கு மாகாணத்திலும் , மற்றும் மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்திலும் சஜீத் வெற்றி பெற , இலங்கையின் 13க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அனுர வெற்றிபெறும் நிலையே உள்ளது.
சஜீத் சில மாவட்டங்களில் வெற்றி பெற்றாலும், அனுர, இம் மாவட்ங்களில் ஒரு சில இடங்களில் இரண்டாவது இடத்திற்கு வந்தாலும் , அது குறைந்தளவிலான வாக்கு வித்தியாசத்தையே கொண்டிருக்கும்!
ரணிலின் நிலை எந்தளவு கவலைக்கிடமாக உள்ளது என்றால், எந்த மாவட்டத்திலும் அவரால் வெற்றி பெறக்கூடிய சூழல் இல்லை! ஒரு சில தொகுதிகளில் வேண்டுமானால் அவர் வெற்றி பெறலாம்!
நாமல் ராஜபக்ச தேர்தலில் இறங்காது இருந்தால் , அவர் இந்த பின்னடைவில் இருந்து ஒரு படி முன்னே வந்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்! ஆனாலும் ரணிலுக்கு இத்தேர்தலில் கிடைக்கவுள்ள வாக்குகளில் பெரும்பான்மையானது , மொட்டு கட்சியினதும், பழைய ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களின் சிறிதளவிலான வாக்குகளும், தமிழ், முஸ்லிம், மலையக கட்சிகளின் தலைவர்கள், அதன் பிரதிநிதிகள் திரட்டித் தரும் வாக்குகளாகும்.
இந்த இடத்தில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விடயம் யாதனில் , தமிழர்களினதோ, முஸ்லிம்களினதோ, மலையகத் தமிழர்களினதோ வாக்குகள் அப்பம் பிய்த்த கதையாக சிதறிப் போயுள்ளமையாகும்! எந்த சிறுபான்மை இன வாக்கு வங்கியும் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு 65 சத வீதத்திற்கு மேல் வாக்கை அளிக்கும் திரட்சி நிலை இல்லாமல் இருப்பதாகும்.
ஒரு பார்வையில் இதுவொரு பலவீனமான அரசியல் நிலை என சொல்லக் கூடியதாக இருந்தாலும், இன்னொரு பார்வையில் இம்மக்களுக்குள் உள்ள கட்சித் தலைமைகளின் மீதான மக்களின் நம்பிக்கையீனம் , இந்த ஏமாற்று அரசியல் தலைமைகளின் போலி அரசியலை முடிவுக்கு கொண்டு வரும் தொடக்க சமிஞ்ஞை என்கிற வகையில் இந்த நிலை அணுகூலத் தன்மையைக் கொண்டுள்ளது என கருதவும் இடமுண்டு!
000
இந்த தேர்தலின் வரலாற்று , அரசியல் முக்கியத்துவமே , கலானியத்துவத்திற்கு பிந்திய சமூகப் பொருளாதார நிலையில் இருந்தும் அதன் வீழ்ச்சியில் இருந்தும் , இலங்கையை கட்டியெழுப்புவதாகும்!
இதற்கான முன்நிபந்தனைகளாகவும், அடிப்படையாகவும் உள்ள விடயங்கள்
1. ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோகம், வீண்விரயத்தினை ஒழித்தல், அல்லது கட்டுப்படுத்தல்.
2. ஆட்சி அதிகார நிலையிலும், நிர்வாகத் தளத்திலும் புதிய மாற்றங்களை ஏற்படுத்தல்.
3 . இனவாதத்தை கட்டுப்படுத்தி, சமூக சமத்துவத்தை பலப்படுத்தல்.
இந்த மூன்று முக்கிய அம்சங்களையும் சாத்தியப்படுத்தக் கூடிய வலுவுள்ள அரசியல் தலைமை , தேசிய மக்கள் சக்தியும் அதன் தலைமை வேட்பாளரான அனுரவுமேயாகும்! இந்த நம்பிக்கையினதும் எதிர்பார்ப்பின் அடிப்படையிலும்தான் , இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு இந்த ஆதரவுத்தளம் கருக்க கொண்டு, வியாபித்து வெளித் தெரிகிறது.
தேசிய மக்கள் சக்தியை இத்தேர்தலில் ஆதரிக்கும் , அரசியல் தெளிவுள்ளோரும், மாற்றத்தை விரும்பும் சக்திகளும் , அனுரவுக்கு ஏன் நாம் இப்போது வாக்களிக்க வேண்டும் என சொல்வதற்கான அடிப்படைகள் இவைதான்!
இப்போது இத் தேர்தல் முடிவின் , இரண்டு விடயங்களுக்கான சாத்தியங்களே உள்ளன.
01. அனுர வெற்றி பெறுவதன் வழியாக, தேசிய மக்கள் சக்தி ஆட்சியுடன் கூடிய அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவது.
02. பலமான எதிர்க்கட்சியாக உருவெடுப்பது.
அரசாங்கத்தை வழிப்படுத்துவதிலும், அதனைக் கேள்விக்குட்படுத்தி கொண்டு செல்வதிலும் எதிர்க்கட்சியின் பணி முக்கியமானதே! ஆனால் இந்த எதிர்க்கட்சியானது முன்பு இருந்த எதிர்க்கட்சிகள் போல் ஒரு போதும் இருக்காது என்பது நமக்குத் தெரிந்ததே!
ஆகவே 21ம் திகதி நாம் , தேசிய மக்கள் சக்திக்கும் தோழர் அனுராவுக்கும் அளிக்கும் வாக்குகள் எந்த விதத்திலும் , வீணற்றுப் போகப் போவதில்லை!
ஒன்று செய்வோம்! அல்லது இரண்டாவதாக செய்ய வைப்போம்!
தோழர்களே ! மக்கள் சக்திகளே உறுதியுடனும் நம்பிக்கையுடனும் முன்செல்வோம்!
புதிய மாற்றத்திற்கான நமது பயணம் , முதலில் கோத்தபாய கும்பலை தோற்கடித்தது! சந்தர்ப்பத்தை பயன்படுத்தி , ராஜபச்ச குடும்பத்தை பாதுகாத்து மக்கள் போராட்டத்தின் நிழலில் அதிகாரத்தை எப்பமிட்டு நின்ற ரணில் கும்பலை இத் தேர்தல் முடிவின் வழியாக தோற்கடிக்க உள்ளது. நாளை இத் தேர்தல் வாக்களிப்பானது இவர்களின் அனைத்துக் கூறுகளையும் துடைத்தழிக்கும் அரசியலை , உதயம் பெறச் செய்யும் அரசியல் ஆற்றலையும் பலமான வீரியத்தையும் தரவுள்ளது.
மக்கள் போராட்டங்களும், அரசியல் விழிப்புணர்ச்சியும் , உறுதிப்பாடும் ஒரு நாளும் தோற்பதில்லை!
000
ஆர்வமுள்ளோர், பகிர்ந்து கொள்ளுங்கள்