கட்டுரையாளர், தமிழ் அரசியல், மற்றும் இலங்கை விவகாரத்தில் ஆழமான கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதி வருபவர். இங்கு அவருடைய கட்டுரை பதிவு பெறுகிறது.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்குத்தான் என்பதை உணராமல் நாட்டு மக்களின் தலையில் மிளகாய் அரைக்கும் வேலைகளில் ரணில் விக்ரமசிங்கவும் அவரது (புதுக்) கூட்டாளிகளும் ஈடுபட்டு வருகிறார்கள். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக ரணில் எந்த எல்லைக்கும் செல்வதற்கு தயாராகிவிட்டார். ஏனெனில், அவருக்கு தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் இழப்பதற்கு ஏதுமில்லை. நாட்டிலேயே அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று தொடர்ச்சியாக பாராளுமன்றம் சென்ற ரணில், கடந்த பொதுத் தேர்தலில் மிக மோசமாக தோற்கடிக்கப்பட்டார். அதுவும் அவரது கொழும்பு வாழ் உறவினர்கள், மேட்டுக்குடி நண்பர்கள், தமிழ்- முஸ்லிம் வாக்காளர்கள் என்று தொடர்ச்சியாக அவருக்கு வாக்களித்து வந்தவர்களினாலேயே கைவிடப்பட்டு அரசியல் அனாதையானார். அவர் இன்று அடைந்திருக்கும் ஜனாதிபதி பதவி, ராஜபக்ஷக்கள் போட்டது. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷக்களினால் நேரடியாக தோற்கடிக்கப்பட்ட ரணில், 2022இல் அவர்களைக் கொண்டே அந்தப் பதவியைப் பிடித்தார். விதி வலியது.
ராஜபக்ஷக்களினால் திவாலாகிய நாட்டை வரிசை யுகத்தில் இருந்து மீட்டது தான் என்பதுதான் ரணில் தற்போது முன்வைக்கும் வாதம். ஏற்கனவே, சிறீமாவோ பண்டாரநாயக்க காலத்திலும் வரிசையுகம் ஏற்பட்டது. சுதேசிய பொருளாதார கொள்கைகளை அமுலாக்கும் நிலைப்பாட்டுக்கு வந்த, சிறீமா அரசாங்கம் வரிசை யுகத்தைத் தோற்றுவித்தது. அந்த வரிசை யுகத்தை மாற்ற தனக்கு வாக்களிக்குமாறு கோரியும், கடும் இனவாதம் கக்கிக் கொண்டும் ஆட்சிக்கு வந்தவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன. மாமன்- மருமகன், பெரியப்பா – பெறாமகன் கட்சியின் மூத்தவர் அவர். இப்போது, மூத்தவரின் வழியின் ரணிலும் தன்னை வரிசை யுகம் மாற்றிய யுக புருஷராக முன்னிறுத்துகிறார். சுதந்திர இலங்கையின் பொருளாதார சீரழிவுக்கும் இன முரண்பாடுகளுக்கும் இந்த நாட்டை தொடர்ச்சியாக ஆண்டு வந்த ஐ.தே.கவும், சுதந்திரக் கட்சியும் காரணங்களாகும். இப்போது, இந்தக் கட்சிகளின் புதிய வடிவங்களே ஆட்சிக்காக முட்டி மோதுகின்றன. ஐக்கிய மக்கள் சக்தி, ஐ.தே.க.வின் குழந்தை. பொதுஜன பெரமுன சுதந்திரக் கட்சியின் குழந்தை. சுதந்திரக் கட்சியே ஐ.தே.க. சிசேரியனில் பிரசவித்ததுதான்.
சுதந்திர இலங்கைக்கும் ரணிலுக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது. அவர், இதுவரை ஆறு தடவைகள் பிரதமர் பதவியை வகித்திருக்கிறார். பல தடவைகள் எதிர்க்கட்சித் தலைவர், நீண்ட காலம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர், சுமார் அரைநூற்றாண்டு கால பாராளுமன்ற உறுப்புரிமை என்ற வரலாற்றைக் கொண்டிருப்பவர். அவரது அரசியல் – அதிகார அனுபவம் இலங்கை அரசியலில் யாருக்கும் இல்லை. இதற்கு முன்னர் இருந்தவர்களிடத்திலும் இல்லை. இனியும் யாருக்கும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. இறுதியாக அவர் காலம் பூராவும் காத்திருந்த ஜனாதிபதி பதவியையும் அரகலய போராட்டத்தினால் ராஜபக்ஷக்களின் ஒத்தாசையோடு அடைந்துவிட்டார். இரண்டரை ஆண்டுகாலம் என்றாலும் அவர் நிறைவேற்று ஜனாதிபதியாகிவிட்டார். அவரினால் நேரடியாக மக்களிடம் வாக்குப் பெற்று அடைய முடியாத பதவி அது. வாழ்நாளில் அந்தப் பதவி கைக்கு எட்டாமல் போய்விடுமோ என்று வருந்தி சோர்ந்திருந்த போது, கையில் விழுந்தது. இப்போது, கையில் விழுந்த பதவியை இறுகிப் பிடிப்பதற்காக அவர் ஆடும் ஆட்டம் அதிகார துஷ்பிரயோக – ஜனநாயக விரோத – ஊழல் மோசடி வழியிலானது. நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தவர்களில் ரணிலுக்கும் பெரும் பங்குண்டு. மத்திய வங்கி பிணை முறி விவகாரத்தில், நல்லாட்சிக் காலத்தில் அவர் நடந்து கொண்ட விதம் பாரிய விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டியது. ஆனால், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க சொல்வது போல, “அரசியல்வாதிகள் எல்லோரும் நண்பர்கள். அவர்கள் ஒருவரையொருவர் காப்பாற்றிக் கொள்வார்கள்…” என்பதுதான் யதார்த்த நிலை.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வீழ்த்தப்பட்ட ராஜபக்ஷக்கள் 2019இல், மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் போது மூன்று விடயங்களை முன்வைத்து ஆட்சிக்கு வந்தார்கள். முதலாவது, நல்லாட்சிக்காரர்கள் நாட்டைப் பிரித்து தமிழர்களிடம் கொடுக்கப்போகிறார்கள், இரண்டாவது, முஸ்லிம் பயங்கரவாதம் நாட்டில் தலை தூக்கிவிட்டது, மூன்றாவது, மத்திய வங்கிக் கொள்ளையர்களை விரட்டுவோம் என்பது. ஆனால், அரகலய உச்சம் பெற்ற போது, மத்திய வங்கிக் கொள்ளையின் நாயகன் என்று யாரைத் தேர்தல் காலங்களில் சித்தரித்தார்களோ, அந்த ரணிலையே ஆட்சியைப் பொறுப்பேற்க அழைத்தார்கள். இரண்டரை ஆண்டுகாலம் அவரின் ஆட்சியைத் தாங்கியும் பிடித்தார்கள். ராஜபக்ஷக்களினால் ஏற்பட்ட வரிசையுகத்தை மாற்றி, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்ட தன்னால், நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல ‘இயலும்’ என்பதுதான் இப்போது ரணிலின் தேர்தல் பரப்புரை வாசம்.
அரகலய உச்சத்தில் இருந்த போது, எதிர்க்கட்சிகளிடத்தில் ஓர் இணக்கம் ஏற்பட்டது. ராஜபக்ஷக்கள் ஆட்சியை கையளித்தால், அதனை தேசிய அரசாங்கத்தினூடாக ஏற்று, விரைவில் தேர்தலை நடத்தி நிலையான ஆட்சியை அமைத்துக் கொள்வது சார்ந்து அந்த இணக்கப்பாடு எட்டப்பட்டது. இந்த யோசனைகளை வழங்கியவர்களில் ரணில் முதன்மையானவர். ஆனால், இந்த ஆலோசனைகளை வழங்கிய சில நாட்களுக்குள்ளேயே அவர், கோட்டாபய ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்றுக்கொண்டு பிரதமராகிவிட்டார். ராஜபக்ஷக்களை காப்பதற்காக களத்தில் இறங்கிவிட்டார். ராஜபக்ஷக்களுடன் அப்போது ரணில் செய்து கொண்ட இரகசிய ஒப்பந்தங்கள், இணக்கப்பாடுகளினால்தான், அவர் ஜனாதிபதியானார். தன்னுடைய பதவிக்காலம் முழுவதும் ஆளுமையும் செலுத்தினார். ஆனால், மக்களிடம் தன்னையொரு மீட்பராக சித்தரிக்கத் தொடங்கினார். அரகலயவின் ஆணையை பொய்யாக்கி, ராஜபக்ஷக்களுக்கான அரசியல் மீள் எழுச்சிக்கான தடத்தை உருவாக்கிக் கொடுத்தார். எதிர்க்கட்சிகள் இடையே காணப்பட்ட இணக்கத்தை தன்னுடைய பதவிப் பேராசைக்காக ஒரே நொடியில் தூக்கியெறிந்துவிட்டு ஓடியவர். அப்போது அவர், அந்த இணக்கப்பாட்டின் படி இயங்கியிருந்தால், ஜனாதிபதி பதவியை அடைந்திருக்க வாய்ப்பில்லை. சிலவேளை சில காலம் பிரதமர் பதவியில் இருந்திருக்கலாம். ஆனால், நாட்டில் நிலையான ஆட்சி ஏற்பட்டிருக்கும். பலமான எதிர்க்கட்சியும் களத்தில் இயங்குவதற்கான சூழல் உருவாகியிருக்கும். ஜனநாயகத்தின் அடிவேர்களை அறுத்துக் கொண்டு அதிகாரத்தை அடைந்தவர் ரணில். இப்போது, உயர்நீதிமன்றமே அவரை ஜனநாயக விரோத சக்தியாக அடையாளம் காட்டுகின்றது. உள்ளூராட்சித் தேர்தலை நடத்தாது, மக்களின் ஜனநாயக உரிமையை பறித்தவர் என்று தன்னுடைய தீர்ப்பில் சுட்டிக்காட்டுகின்றது. இப்படிப்பட்ட ஜனநாயக விரோதியான, இரகசிய ஒப்பந்தங்களின் மூலம் ராஜபக்ஷக்களை காப்பாற்றியவரை, நாட்டின் மீட்பராக சித்தரிக்கும் அரசியல் அபத்தமானது. அது, ஊழல், மோசடி, சலுகை அரசியலினால் வருவது. அதனை, கொழும்புவாழ் மேட்டுக்குடி இணக்க தமிழ் – முஸ்லிம் பிரமுகர்களும் முன்னெடுக்கிறார்கள். அதற்காக அவர்கள் என்றைக்கும் இல்லாதவாறு களமாடுகிறார்கள்.
தமிழரசுக் கட்சியின் இறுதி மத்திய குழுக் கூட்டத்தில், தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் கட்சியினரும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ரணிலிடம், மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரங்களை (பார் லைசன்ஸ்) வாங்கியிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பேசியது பாராளுமன்ற உறுப்பினர்கள். எந்த ஆட்சிக் காலத்திலும் இல்லாத அளவுக்கு நாட்டில் அதிகமாக மதுபானசாலைகள் ரணிலின் கடந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் முளைத்திருக்கின்றன. இவை எல்லாமும், தன்னுடைய ஆட்சியைக் காப்பாற்றவும், ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு திரட்டுவதற்காகவும் வழங்கப்பட்டதாக சஜித் அணி குற்றஞ்சாட்டுகின்றது. ஆதாரங்களையும் முன்வைக்கின்றது. நாட்டின் பொருளாதாரத்தை மீட்ட நாயகன், மதுபானசாலைகளின் வழியாக பொருளாதாரத்தின் உச்ச பயனை நாட்டு மக்களுக்கு வழங்குகிறாரா என்பது முக்கியமான கேள்வி? தமிழரசுக் கட்சியின் தலைவர்கள், கடந்த காலத்தில் ரணிலை ஜனநாயக விரோத சக்தியாக விமர்சித்திருக்கின்றன. அப்படி விமர்சித்தவர்களின் சுமந்திரனும் சாணக்கியனும் பிரதானமானவர்கள். இந்த நிலையில், ரணிலை ஆதரிக்கும் முடிவை நோக்கி அவர்களினால் செல்ல முடியாது. அப்படிச் சென்றால், மத்திய குழுக் கூட்டத்தில் மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் பேசப்பட்டதற்கான பதில்களை அவர்கள் வழங்க வேண்டியிருக்கும். மதுபானசாலை அனுமதிப்பத்திரம் மற்றும் ரணிலுக்கு வாக்களிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவுக்குள் பேசப்பட்டமை தொடர்பில், மத்திய குழு உறுப்பினர் ஒருவர் பகிரங்கமாக சமூக ஊடகங்களில் எழுதியும் இருக்கிறார். அப்படியான நிலையில், ரணிலை நோக்கிய பாய்ச்சலை தமிழரசுக் கட்சியினால் நிகழ்ந்த முடியாது. அதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.
ரணிலோடு தற்போது இணைந்திருப்பவர்கள் எல்லோரும் கடந்த காலத்தில் ராஜபக்ஷக்களின் வெற்றிகளில் பங்களித்தவர்கள். இனவாதத்தையும் மதவாதத்தையும் அவர்களின் இரட்டை இலக்காக கொண்டவர்கள். ரணிலை விட்டால் அவர்களுக்கு இப்போது போக்கிடம் இல்லை. ராஜபக்ஷக்கள் அடையாளத்தோடு எதிர்வரும் தேர்தல்களை எதிர்கொண்டால், தங்களது பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கே பிரச்சினை வந்துவிடும் என்ற நிலையில்தான், அவர்கள் ரணில் பின்னால் திரண்டிருக்கிறார்கள். தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், சலுகைகள் மற்றும் ‘பார்’ போற்றும் விடயங்களுக்காக இணைந்திருக்கிறார்கள். ஏனெனில், அவர்களினால் அடுத்த தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்புக்கள் இல்லை என்கிற போது, இப்போதே வாரிச்சுருட்டிக் கொள்ள நினைக்கிறார்கள். அதாவது, காற்றுள்ள போதே தூற்றும் உத்தி.
இன்னொரு பக்கம், தமிழ்- சிங்கள– முஸ்லிம் மேட்டுக்குடிகளும் முகவர்களும் ரணிலை இணக்கமாக பார்க்கின்றன. இந்தத் தரப்பினர் எப்போதுதே தங்களின் தனிப்பட்ட நலன் சார்ந்து மாத்திரமே சிந்தித்து வந்திருக்கின்றன. இவர்களுக்கு நாடு குறித்தோ, இனமுரண்பாடுகள் குறித்தோ எந்தவித கவலையும் இல்லை. தங்களின் கல்வி, பொருளாதார நிலை, சொகுசு வாழ்கை குறித்தே சிந்தனை. அதில், தலையீடுகளை செய்யாது யார் ஆட்சி செய்தாலும் அவர்களின் செல்லப்பிள்ளைகளாக இருப்பார்கள். அவர்களுக்காக உழைப்பார்கள். கருத்துருவாக்கத்தைச் செய்து சாதாரண மக்களிடம் திணிப்பார்கள். அப்படியான கருத்துக் கணிப்பொன்று, அண்மையில் கொழும்பில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனமொன்றின் பெயரினால் வெளியிடப்பட்டது.
ரணிலை இந்த ஜனாதிபதித் தேர்தலில் யாரெல்லாம் ஆதரிக்கிறார்கள் என்பதை பார்த்தாலே போதும், அவர் ஏன் வீழ்த்தப்பட வேண்டியவர் என்பதை அறிவதற்காக. ராஜபக்ஷக்களின் வால்களும், சலுகை பெற்றோரும், உடல் உழைப்பை வழங்காது ஏய்த்து வாழும் தரப்பும் இணைந்ததுதான் ரணில் அணி. அங்கு ஜனநாயக உரையாடல்களுக்கோ, பொருளாதார முன்னேற்றத்திற்கோ இடமில்லை. வரிசை யுகத்தை இல்லாதொழித்துவிட்டதாக தேர்தல் பரப்புரையை முன்வைத்தாலும், அதில் எவ்வளவு தூரம் உண்மையிருக்கின்றது என்பது பிரதான கேள்வி? கடந்த காலத்தில் ராஜபக்ஷக்களோடு இருந்து நாட்டைச் சூறையாடியவர்கள் இப்போது ரணிலோடு சேர்ந்து நின்று சூறையாட முயல்கிறார்கள். அவர்கள்தான், ரணிலை நம்பிக்கையின் முகமாக காட்டுகிறார்கள். ரணிலுக்கு இழப்பதற்கு ஏதுமில்லை என்ற நிலையில், அவர் அத்தனை வழிகளிலும் வெற்றிக்காக போராடுகிறார். கொண்டும் – கொடுத்தும் உழைக்கிறார். ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு துணை போகிறார்.
தமிழ் மக்களைப் பொறுத்தளவில் இந்தத் தேர்தலில் ரணிலை ஆதரிப்பதற்கான எந்தத் தேவையும் இல்லை. ராஜக்ஷக்களின் இடத்தில் இப்போது ரணில் நிற்கிறார். ராஜபக்ஷக்களோடு இருந்தவர்கள் எல்லோரும் ரணிலோடு நிற்கிறார்கள். கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களின் விசுவாசிகளாக வடக்குக் கிழக்கில் நின்ற டக்ளஸும், பிள்ளையானும், வியாழேந்திரனும், அங்கஜனும் இப்போது ரணிலோடு நிற்கிறார்கள். அவர்கள் வழியே சிறந்தது என்றால், ரணிலோடு இணங்கிப் போவதில் பிழையில்லை. ஆனால், இவர்களின் நிலைப்பாடுகளுக்கு எதிராகத்தான் கடந்த காலங்களில் ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள். அந்த நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான எந்தத் தேவையும் தமிழ் மக்களுக்கு இல்லை. ஆக, ரணிலின் பக்கத்தில் தமிழ் மக்கள் ‘சாய’ மாட்டார்கள். தமிழ் அரசியல்வாதிகள் சிலருக்கு ரணில் இப்போது ‘பார்’ போற்றும் தலைவர். ஆனால், தமிழ் மக்களுக்கு இல்லை. காலம் அதனை உணர்த்தும்.
0000
-காலைமுரசு – ஆகஸ்ட் 25, 2024