தமிழ் தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
- பெ.முத்துலிங்கம்

இலங்கையில் பிரதிநிதித்துவ (பாராளுமன்ற) அரசியல் முறைமை அறிமுகப்படுத்திய நாள் முதல் இனத்துவ பிரதிநிதித்துவ அரசியல் வலுப்பெறலாயிற்று. கொழும்பை மையமாகக் கொண்டு; உருவாக்கப்பட்ட தேசியக் கட்சிகள் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு சம முக்கியத்துவம் அளிக்காமையினால் , சிறுபான்மை அரசியல் தலைமைகள் சிறுபான்மை மக்களின் தனித்துவத்தை முன்னிறுத்தி தனித்துவமாக செயற்பட ஆரம்பித்தன. தமக்கென தனித்துவமான கட்சிகளை உருவாக்கிக் கொண்டன. (தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் என அனைத்துப் பிரிவிலும் இந்தப் போக்கு உருவாகின).

எழுபதுகளில் வீரீயம் பெற்ற தமிழ் தேசியம் இடதுசாரி கட்சிகளையும் , வலதுசாரி கட்சிகளையும் வட கிழக்கில் பூச்சிய நிலைக்குத் தள்ளியது.இடசாரி கட்சிகளாலும் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கில் தமது செல்வாக்கினை விரிவடையச் செய்ய முடியாமற் போய்விட்டது. அறுபதுகளின் பின் இறுதியில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட என். சண்முகதாசன் தலைமையளித்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வடக்கிலும் கிழக்கிலும் செல்வாக்கு செலுத்த முடியாமற் போய்விட்டது.
இங்கு நான் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களையும் தமிழ்தேசிய அரசியலையும் , மலையகத் தமிழ் அரசியலையும் மட்டுமே இத்தலைப்பின் கீழ் எழுதுவதால், முஸ்லிம்கள் பற்றியதும், அவர்களது தனித்துவ கட்சிகள் பற்றியும் எழுதுவதை தவிர்த்துள்ளேன். அடுத்தடுத்த கட்டுரைகளில் அவை பற்றி எழுதவுள்ளேன்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னரும் வலதுசாரி கட்சிகளும் இடதுசாரி கட்சிகளும் வடக்கு கிழக்கில் ஆதிக்கம் செலுத்த முனைந்த போதிலும் தோல்வியைத் தழுவின. ஆயினும் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தென்னிலங்கையின் இடதுசாரி கட்சியென அடையாளப்படுத்தப்படும் ஜேவிபி- தே.ம.ச (என்பிபி) தமிழ் தேசியத்தின் ஊற்றுவாய் எனக் கருதப்படும் யாழ்பாணத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பெரிதும் அரசியல் அறிமுகமில்லா வேட்பாளர்களை முன்னிறுத்தி மூவரை வெற்றி பெறச் செய்துள்ளது. கிழக்கிலும் இது நடந்துள்ளது.
இதேபோல் மலையகத்தில் பெரிதும் அறிமுகமில்லா வேட்பாளர்களை முன்னிறுத்தி நான்கு வேட்பாளர்களை வெற்றிப் பெறச் செய்துள்ளது. தமிழ் மக்களதும் , மலையக மக்களினதும் அரசியல் வரலாற்றில் இது ஒரு திருப்பு முனையாகும். வடக்கு மற்றும் மலையகம் வாழ் தமிழ் மக்கள் தம் இனத்துவ பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழ் கட்சிகளின் வேட்பாளர்களையே வெற்றி பெறச் செய்து வந்துள்ளனர். ஆனால் நடந்த பொதுத்தேர்தலின் போதும் அதனைத் தொடர்ந்து தற்போது நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலும் தம் நிலைப்பாட்டில் மாற்றத்தைக் கடைப்பிடித்துள்ளனர். இம்மாற்றம் வடக்கு கிழக்கில் , தமிழ் தேசியம் வலுவிழந்து சரிவினை நோக்கி நகர்கின்றதா என்ற கேள்வியை எழுப்புவதுடன் , மலையக மக்கள் நமது தமிழ் தலைமைகள் எனும் நிலைப்பாட்டிலிருந்து விலகிச் செல்கின்றனரா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
பொதுத் தேர்தலின் பின்னர் வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கட்சிகள் விழிப்புற்றதுடன் , தமிழ் தேசிய தரிசனம் சரிவை நோக்கிச் செல்லவில்லை எனக் கூற ஆரம்பித்ததுடன், அண்மைய பிரதேச சபைத் தேர்தலின் போது தமிழ் தேசியத்தை தமிழ் மக்கள் கைவிட வில்லையென்பதை நிரூபிக்கும் வகையில் வாக்களிக்கும்படி கோரின. அதனை வலியுறுத்தும் வகையில் தமிழரசுக் கட்சியும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், மற்றும் தமிழ் தேசியக் கூட்டணியிலிருந்து பிரிந்து சென்று உருவாக்கப்பட்ட ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியும் வடகிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் களம் இறங்கின.
தென்னிலங்கை அரசாங்கத்திற்கு குறிப்பாக ஜேவிபிக்கு பாடம் புகட்டும் வகையில் வடகிழக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எனக் கோரினர். மலையக தலைமைகள் தாங்கள் தனித் தனியே உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியினை பிடிக்க முடியாவிட்டாலும் தேர்தலின் பின் கூட்டுச் சேர்ந்து சபைகளில் ஆட்சி அமைப்போம். ஆகையால் எங்களை வெற்றிப் பெறச் செய்யுங்கள் என மலைய மக்களைக் கோரினர்.
ஆனால் நடந்துள்ளது என்னவெனில், தமிழ் தேசியத்தின் தலையெனக் கருதப்படும் யாழ் மாவட்டத்தின் பதினெழு சபைகளில் அதிகளவு ஆசனங்களைப் பெற்ற போதிலும் ; பலமான ஆட்சியை உருவாக்கக் கூடியவாறு மக்கள் ஆணையை வழங்கவில்லை. அதனையடுத்து தீவிரமாக தமிழ் தேசியத்தை வலியுறுத்திய அகில இலங்கை தமிழ் காங்கிரசு வடக்கின் பல சபைகனை தன் வசப்படுத்திக் கொள்ளும் என கருதப்பட்டபோதிலும் இரண்டு சபைகளிலேயே முதன்மைப் வகித்துள்ளது. அதேவேளை தமிழ் தேசியக் கூட்டணியிலிருந்து விலகி தமிழ் தேசிய ஜனநாயக கூட்டணியும் பல சபைகளை வென்று கொள்ளும் என எதிர்பார்த்த போதிலும் அதுவும் பாரிய வெற்றியைப் பெறவில்லை. தமிழரசுக் கட்சியைத் தவிர ஏனைய தமிழ் கட்சிகள் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் பிரதிநிதித்துவத்தைப் பெறவில் லை. ஆனால் வடக்கின் அனைத்து பிரதேச சபைகளிலும் , நகர மற்றும் மாநகர சபைகளிலும் தமிழரசுக் கட்சிக்கு அடுத்ததாக ஜே.வி.பி.-தேசிய மக்கள் சக்தி கட்சி பிரதிநிதித்துவத்தைக் பெற்றுள்ளது .
அதிலும் தேசிய மக்கள் சக்தி சில சபைகளில் இரண்டாம்; ( பருத்தித்துறை , வலிகாமம் வடக்கு, வலிகாமம் கிழக்கு, வலிகாமம் தென் மேற்கு, வேலனை, காரை நகர் பிரதேச சபைகள்) இடத்தையும், சில சபைகளில் முறையே யாழ்ப்பாணம் மாநகர சபை, சாவகச்சேரி நகர சபை , வல்வெட்டித்துறை நகரசபை, பருத்தித் துறை நகரசபை, மற்றும் வலிகாமம் மேற்கு, வடமராட்சி தென் மேற்கு, சாவகச்சேரி , நெடுந்தீவு , ஊர்காவற்துறை எனும் பிரேதேச சபைகளில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.
இதேவேளை ஆசனங்கள் பெற்றதில் தமிழரசு கட்சி முதலாம் இடத்தையும் தேசிய மக்கள் சக்தி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. தமிழரசு கட்சிக்கு சவாலாக இருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மூன்றாம் இடத்தையே பெற்றுள்ளது. முறையே தமிழரசு 137 ஆசனங்களையும் இரண்டாம் இடத்தை பெற்று தேசிய மக்கள் சக்தி 81 ஆசனங்களையும் மூன்றாம் இடத்தைப் பெற்ற அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 79 ஆசனங்களை பெற்றுள்ளது. ( கிழக்கின் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் ஜேவிபி-தேமச அதிகளவு பிரதிநிதித்துத்தைக் கொண்டுள்ளது)


0000
இலங்கையின் தேர்தல் அரசியல் வரலாற்றில் தென்னிலங்கை இடது சாரி கட்சியொன்று வடகிழக்கின் உள்ளுராட்சி சபைகளில் இந்தளவு வெற்றியைப் பெற்றமை இதுவே முதற் தடவையாகும். ஜேவிபி-தே.ம.ச. கட்சியானது ஏனைய கட்சிகள் போலன்றி முழு நேர களப்பணியாளர்களைக் கொண்ட கட்சியாகும். அக்கட்சி சார்பாக வடக்கில் போட்டியிட்டவர்களில் வட்டார மட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் குறிப்பிடத்தக்களவு காணப்படுகின்றனர்.
அதன்படி பார்க்கின் ஜேவிபி – தே.ம.ச. யினரின் வெற்றியாளர்களில் பெரும்பாலோர் அவ்வவ் கிராமத்தைச் சார்ந்தோர் அல்லது அவ்வட்டாரத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டவர்களாவர். ஏனைய கட்சிகளைப் போலல்லாது ஜேவிபி தமது கட்சியின் கொள்கைக் கோட்பாடுகள் பற்றி தமது அங்கத்தவர்களுக்கு அறிவூட்டல் செய்யும் கட்சியாகும். கட்சியின் தலைமை எடுக்கும் கொள்கை நிலைப்பாட்டினை கட்சியின் கீழ் மட்டம் வரை திட்டமிட்டு கொண்டுச் செல்லும். அவ்வகையில் வடகிழக்கில் தெரிவு செய்யப்பட்ட அனைத்து தமிழ் பிரதிநிதிகளுக்கும் சுயர்நிர்ணய உரிமை தொடர்பில் தம் கட்சியின் நிலைப்பாடு பற்றி அறிவூட்டல் செய்யும். அனைத்து மக்களும் பாராபட்சமின்றி உரிமைகளை அனுபவிக்கும் ஆட்சி முறைமையை உருவாக்குவதே தம் நிலைப்பாடு என்பதனை வெற்றிப் பெற்றோர் மத்தியில் வலியுறுத்தும்.
மறுபுறம் உள்ளுராட்சி மன்றங்கள் மூலம் பக்கச் சார்பற்ற வகையில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும். தெரிவு செய்யப்பட்டவர்கள் அக்கருத்தினையே தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்வர். எதிர்காலத்தில் வட கிழக்கின் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இச்செயற்பாடு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்? தமிழ் தேசியக் கட்சிகள் இத்தாக்கத்தை எவ்வாறு எதிர்கொள்ளும்?. தொடர்ச்சியாக தமிழ் தேசியத்தை வலியுறுத்துவதன் மூலம் ஜே.வி.பியின் வியாபித்தலைத் தடுத்து நிறுத்த முடியுமா? அல்லது காணமால் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்வு , அல்லது வடகிழக்கு இணைப்பு மற்றும் மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கு எனும் கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம் தமிழ் மக்களது உணர்வினைத் தட்டி எழுப்பி தமிழ் மக்களை தமிழ் தேசியத்துடன் கட்டி வைத்துக் தமிழ் கட்சிகளுக்கு முடியுமா? என்ற கேள்விகள் எழுகின்றன.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் சிறந்த வாழ்வாதார நிலையையும் உட்கட்டமைப்பு வசதிகளையே எதிர்பார்த்திருக்கின்றனர். பிரதேச சபைகள் மூலம் அபிவிருத்தி திட்டங்களையும் , ஊழலற்ற ஆட்சியை மேற்கொண்டால் ஜேவிபி- தே.ம.ச மீதான ஈர்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் எவ்வாறனதாக இருக்கும்? .
எவ்வாறு வடகிழக்கில் ஜேவிபி -தே.ம.ச தன்பிரதிநிதித்துவத்தை இத்தேர்தலின் போது நிலை நிறுத்தியுள்ளதே அதேபோல் மலையக உள்ளுராட்சி மன்றங்களிலும் கணிசமான ஆசனங்களை ஜேவிபி-தே.ம.ச வெற்றிப் பெற்றுள்ளது. வடக்கின் தமிழரசு கட்சி போல் மலையகத்தில் இலங்கை தொழிலளார் காங்கிரசும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் மலையக மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தி வரும் கட்சிகளாகும்.
ஆனால் இவ்விரு கட்சிகளும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சரிவை சந்தித்துள்ளது. மலையகத்தின் நுவரெலிய மாநகர சபை, அட்டன் டிக்கோய நகரசபை, தலவாகெல்லை-லிந்துள்ள நகரசபை மற்றும் அம்பகமுவ, நுவரெலிய – கொத்மலை, அங்குரன்கெத்த, வலப்பனை, மஸ்கெலிய. நோர்வூட், அக்கரபத்தனை, கொட்டகல, முதலிய பிரதேச சபைகளில் அதிக ஆசனங்களை ஜேவிபி-தே. ம.ச பெற்றுள்ளது. இவ்வாறு வெற்றி பெற்றவர்களில் அதிகமானோர் இளம் ஆசிரியர்கள் மற்றும் இளஞர்களாவர். இவர்கள் மலையக குடியிருப்பு பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கி பிரதேச சபைகளை சிறப்புற நடத்தினால், மலையக தமிழ் கட்சிகள் எதனைக் கோருவதன் மூலம் மலையக மக்களை தம்பால் வென்றெடுக்க முடியும் ?.
மேலும் இந்தியா வழங்கும் வீடமைப்பு திட்டத்தை ஜேவிபி-தே.ம.ச. பக்கச் சார்பற்ற முறையில் முன்னெடுத்து உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கினால் மலையக மக்களது மனோநிலை எவ்வாறனதாக அமையும்?. வெறுமனே நாம் மலையகத் தமிழர் என்ற அடையாளத்தையும் , சம்பள அதிகரிப்பு என்பனவற்றினை மட்டும் முன்னிறுத்தி மலையக மக்களை தம் கட்சிகளின் பால் இனிமேலும் தக்க வைக்க முடியுமா? மேலும் மலையக கட்சிகளின் பால் மலையக இளஞர்கள் கொண்டுள்ள கருத்துநிலை மலையக கட்சிகளின் பால் எவ்வாறான தாக்கத்தை உருவாக்கும்.?

- குறிப்பு – சுயாதீனக் கட்சிகள் பெற்ற ஆசனங்களை உட்சேர்க்க வில்லை;.
- ஐ.தே.க – ஐக்கிய தேசிய கட்சி
- ம.போ.மு – மக்கள் போராட்ட முன்னணி
- தே.ம.ச – தேசிய மக்கள் சக்தி
- இ.தொ.கா – இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
- இ.பொ.மு – இலங்கை பொதுசன முன்னணி
- ஐ.ம.ச – ஐக்கிய மக்கள் சக்தி
- சு.கு – சுயாதீன குழு
- ம.ம.மு – மலையக மக்கள் முன்னணி
வடகிழக்கு மக்கள் உள்ளுராட்சி மன்றங்களில் அதிக வாக்கினை வழங்கியுள்ளனர் எனக் கருதி அதனால் தமிழ் தேசியத்திற்கு அச்சுறுத்தலில்லை என வடக்கின் தலைமைகள் கருதுமாயின் , எதிர் வரும் மாகாணத் தேர்தலின்போது பாரிய சவாலை சந்திக்க நேரிடுவதுடன் தமிழ் தேசியத்தை தக்கவைத்துக் கொள்வதும் சவாலாக அமையும்.
- நன்றி – வீரகேசரி
000