
தமிழர் அரசியலில், ஆயுதப் போராட்டத்திற்கு முன்பு இத்தகைய ஹர்த்தால், கடையடைப்பு பெயர் போனது… ஆயுத இயக்கங்கள் உருவாகி , ஆயுதப் போராட்டம் நடந்து கொண்டிருந்த போதும் இத்தகைய ஹர்த்தால், கடையடைப்புகள் நடந்துதான் வந்துள்ளது.கிட்டத்தட்ட 50 ஆண்டு கால தமிழர் அரசியலில் ஹர்த்தால், கடையடைப்புகள் என ஒரு நீண்ட வரலாறே உள்ளது.
இப்போது , இன்றும் நாங்களும் அரசியலில் உள்ளோம், எதிர்க்கிறோம் என்பதுடன் மட்டுமல்லாது, தமது அதிகாரத்தினை தேர்தலை முன்வைத்து பாதுகாத்துக் கொள்ளவே இத்தகையை போராட்டங்களை இந்த அரசியல் கட்சிகள் முன்னெடுக்கிறர்கள். இவர்களுக்குள்ள நோக்கமே மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டதல்ல என்பது , சத்தியம் செய்து நிருபிக்க வேண்டிய ஒரு உண்மை அல்ல என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
சுமந்திரனின் அரசியல் ஏன் இப்படி தடுமாறுகிறது?
எல்லோரும் ஏறி சறிக்கு விழுந்த இந்த அரசியல் ஏமாற்றில், இப்போது சமந்திரனும் வீழ்ந்திருக்கிறார். இந்த வீழ்ச்சியும் பின்னடைவும் சறுக்குதலும் மிகத்தவறானது என்று சொல்லக்கூடிய அரசியல் நாடகத்தின் இந்த கோமாளிப் பாத்திரம் இப்போது சுமந்திரன் வசமாகி உள்ளது . இதனை ஆழ்ந்து பார்த்தால் தமிழ்த் தேச அரசியலின் தியாகி – துரோகி என்கிற கதையாடலின் பின் விளைவுதான், சுமந்திரனை இந்தப் பாத்திரத்தினை எடுக்கத் தூண்டியுள்ளதுடன், புனிதப்பட்ட வேள்வியில் அவரும் தீட்சை பெறத்தான், இந்த நாடகத்தினை அண்மைக்காலமாக ஆடி வருகின்றார் என திடமாக எம்மால் சொல்ல முடியும்.
ஒரு கொலையை அரசியலாக மாற்றுவது தவறில்லை என சிலர் வாதிக்க முடியும்….
இலங்கை இராணுவம் உட்பட அதன் முப்படையினரும் ஆயிரக்கணக்கான அப்பாவி சிங்கள , தமிழ், முஸ்லிம் சிவிலியன்களை படுகொலை செய்த உலகிலேயே கொடூரமான இரத்தக்கறை படிந்த படைத்தரப்பு என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இந்த முத்தையன்கட்டு படுகொலை என்கிற மிகப் பலவீனமான ஒரு உள்ளடக்கத்தினை முன்வைத்து, மக்களின் அரசியலை , ஏழை மக்களின் வாழ்வை , எந்தப் பொறுப்புமற்று சூதாட்டமாக்கும் கபடத்தனம் மன்னிக்கத்தக்கதல்ல.

மக்களின் பிரச்சினைகளை, துயரங்களை, இழப்புகளை பயன்மிக்க வகையில் வெளிப்படுத்தும் அரசியல் வழிமுறைகள் கண்டறியப்படல் வேண்டும். இது அரசியல் கட்சிகளுக்கும் அக்கறைமிகு சிவில் அமைப்புகளுக்கும் தேவை . அன்றாடம் காய்ச்சிகளாக உள்ள உழைக்கும் ஏழை மக்கள் தொடக்கம் நடுத்தர மக்களின் வாழ்வின் நாளாந்த உழைப்பின் , சிறு வருமானத்தின் மீது அடிவிழும் எந்த முன்னெடுப்பும் அர்த்தமற்றது. சுமந்திரன் தொடக்கம், இத்தகைய மக்களின் வருமானத்தின் மீது அக்கறையற்ற தரப்பினர் இதனால் ஒருக்காலும் பாதிக்கப்படப் போவதில்லை.
முத்தையன்கட்டு இராணுவ முகாமில் தொடங்கி முத்தையன்கட்டு குளத்தில் பிணமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞனின் மரணத்திற்கு ஒரு வகையில் , இலங்கை இராணுவத்தின் சிலர் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இந்தக் கொலையை இவ்வளவு பெரிய அரசியலாக்கி , வடக்கு கிழக்கு முழுவதும் ஹர்த்தால் செய்ய தமிழரசுக் கட்சியும் அதன் சுமத்திரன் தலைமையும் எடுத்துள்ள அரசியல் முதலீட்டில், அவர் மீதான மதிப்பு அடியோடு இல்லாமலாகி விடுகிறது. இதன் பின்னிருந்த போதைப்பொருள் வினியோகம், திருட்டு தொடங்கி, படுகொலை செய்யப்பட்டவரின் பிரேதபரிசோதனை அறிக்கை வரை , இந்த ஹர்த்தால், கடையடைப்பினை செய்யக் கோரியவர்களின் அரசியலை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.
அரை நூற்றாண்டுகளாக தமிழர் அரசியலில் செய்யப்பட்ட இந்த இந்த ஹர்த்தால், கடையடைப்புகளுக்கு நன்மையாக தமிழ் மக்கள் இதுவரை எதனை பெற்றிருக்கிறார்கள்? . மனிதகுலம் கண்ணீர்விடும் மிகப் பெரும் படுகொலைகள், எரிப்புகள் , இனவழிப்புகளுக்கு காட்டப்பட்ட அடையாள மக்கள் எதிர்ப்புகளுக்கே ஒன்றும் கிடக்காத தமிழினம் , இந்த குற்றச்செயலுடன் சம்பந்தப்பட்ட ஒரு கொலைக்கு, இத்தரப்புகளால் கோரப்பட்டுள்ள இந்த ஹர்த்தால், கடையடைப்பினால் எதனைத்தான் பெற்றுக் கொள்ளப் போகிறது ?
ஏழை , நடுத்தர மக்களின் வயிற்றில் அடித்து , இவர்கள் செய்த அரசியல், இவர்களின் பதவிகளுக்கும், வருமானத்திற்குமான தந்திரோபாயத்தால் மக்களை உணர்சியூட்டி போடப்பட்ட, போடப்படுகின்ற முதலீடாகும். தங்களின் பாடோபகரமானதும் அற்பத்தனமானதுமான அரசியலுக்கு அன்றாடம் காய்ச்சிகளின் வயிற்றில் அடித்து, உணர்ச்சி அரசியலை முன்னெடுத்து வரும் ஈழத்தமிழர் அரசியல் கண்டிக்கப்பட வேண்டியது.
இன்று உடனடியாக செய்யப்பட வேண்டிய விடயங்களாக…
*தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது.
*அதிகாரப் பரவலாக்கத்தினை முன்னெடுப்பது.
*2009 யுத்த முடிவிற்குப் பின் , வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவக் குறைப்புச் செய்வது
*இனங்களிடையே நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவது
போன்ற பல முக்கியமான விடயங்களையே செய்ய வேண்டி உள்ளது. இவற்றினை செய்வதற்கான எந்த வேலைத்திட்டமும் வடக்கு கிழக்கிலுள்ள எந்த தமிழ்க்கட்சிகளிடமும் இல்லை. இவர்களிடம் உள்ள ஒரே விடயம், வெறும் இனவாதமிக்க உணர்ச்சிபூர்வமான அரசியல் கோமாளித்தனமே…
இப்படியான படுமோசமான அரசியலை பல்லாண்டுகளக தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுத்து வரும் தமிழ் அரசியல் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். கறந்த பாலை, நாற்றமெடுக்கும் பானைக்குள் ஊத்தினால் அது கேட்டே போய்விடும். , சமகாலத்திலும், எதிர்காலத்திலும் புதிய சிந்தனைகள், புதிய வடிவங்களில்தான் தமிழ் அரசியல் பயணிக்க வேண்டி உள்ளது., அடையாள எதிர்ப்பு அரசியலை செய்யுங்கள், மக்களின் முழு வாழ்க்கையையும் பாதிக்காதவாறு , உங்களின் தனிப்பட்ட நலன்களைக் கடந்து மக்களை இணைத்து செய்யுங்கள்.. இப்படியான ஏமாற்றும் கபடத்தனமிக்க அரசியைல் கைவிடுங்கள்!
தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என தந்தை செல்வா சொன்னதாக சொல்வார்கள்… இப்போது உண்மை நிலை என்னவென்றால், தந்தை செல்வாவின் வழிவந்த இந்த அரசியல் தலைமைகளிடம் இருந்துதான் , மக்கள் தங்களை காப்பாற்ற வேண்டியுள்ளது.